கோவை:மசக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு 32 வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
முன்னதாக பேசிய அவர், மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் விரக்தியில் இருப்பார்கள் எனவும் ஆனால், தேர்தல் முடிந்ததும் அவர்களுக்கு அரசுப்பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் தொகுதிகளை இழந்ததைக் குறிப்பிட்ட அவர், இம்முறை அது போல் நடக்காமல் தடுக்க பகுதி செயலாளர்கள் தங்களது வாக்குச் சாவடிகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு தோழமை கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில் 811 இடங்களுக்கு 3500 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்ததால் பலருக்கு சீட் கொடுக்க முடியவில்லை எனக்கூறிய அவர், சீட் கிடைக்காதவர்கள் வீடுகளுக்கே சென்று வேட்பாளர்கள் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கழிவுநீரின் மத்தியில் வாழும் மக்களை எடுத்துக்கூறும் புகைப்படங்கள் - பா. இரஞ்சித்