கோயம்புத்தூர்:மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் பெற்ற பயனாளிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு பயனாளர்களை கௌரவித்தனர். உக்ரேன் போரின் போது இந்திய அரசால் மீட்கப்பட்டு வந்த மாணவர்களையும் கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அண்ணாமலை, முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பல தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளாக 5 கோடியே 50 லட்சம் கழிப்பறைகள் தான் இருந்தது. பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன் 8 ஆண்டு காலத்தில் 11 கோடியே 23 லட்சம் பேருக்கு கழிப்பறை கட்டித்தர பட்டுள்ளது. தற்பொழுது மின்சாரம் இல்லாத கிராமம் இந்தியாவிலேயே இல்லை. 67 சதவிகிதமாக இருந்த எல்பிஜி தற்பொழுது 99.23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2023 இல் இந்தியாவின் கடைசி மனிதனுக்குக் கூட வீடு இருக்கும் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பிரதமரின் எட்டாண்டு காலம் ஆட்சியில் ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் மக்களை முன்னேற்றி வருகிறது. வைரஸ் தொற்று காலத்தில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி முன்னேறிய நாடுகளுக்கு இணையாக தடுப்பூசியை இந்திய அரசு வழங்கியுள்ளது. ஏழை மக்களுக்காக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு தொழில்நுட்பங்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனால் முழுமையான பலன்கள் சென்றடைகின்றன. உக்ரைன் ரஷ்யா போரில் சிக்கி கொண்ட மாணவர்களை காப்பாற்ற நமது பிரதமர் தலைமையிலான அரசு அமெரிக்க ரஷ்ய அரசு அதிகாரிகளிடம் பேசி மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளது. மத்திய அரசு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழலை ஒழித்து வருகிறது. கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறி வரும் நிலையில் தமிழகத்தில் அதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவும் பேசவில்லை. கேரள அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழக அரசு ஊழலில் ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.