கோயம்புத்தூர்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் - மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சரத்குமார், "தற்போது அரசு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைச் சிறப்பாகவும், சீராகவும் நடத்தி முடித்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். முழுச் செயல்பாடுகள் குறித்து கருத்துகளைச் சொல்ல இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும்.
ஆனால் தற்போதைய ஆட்சி - சட்டப்பேரவையைச் சிறப்பாக ஒரு ஜனநாயக முறையில் நடத்தி முடித்துள்ளதற்கு ஒரு சான்று. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை நேரடியாக மக்களுக்கு நல்லது செய்தவர்கள் அவர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே, அந்தந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் போட்டியிடலாம் எனத் தெரிவித்துள்ளேன். அதை ஏற்று பல்வேறு இடங்களில் மனு தாக்கல்செய்துள்ளனர். எந்தெந்தப் பகுதிகளில் மனு தாக்கல்செய்துள்ளார்கள் என்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. இந்த நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தற்போதைய அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதேபோல மூன்றாம் அலை வராமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளனர். அவர்கள் யாரும் தவறு செய்யவில்லை என்றால் வருந்த வேண்டாம்.