கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சி ஒப்பந்தப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ESI,PF, போன்ற அரசின் சலுகைகள் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மூன்றாவது நாளாக இன்றும் (அக்-4)வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கூலி 721 ரூபாயும் வழங்க வேண்டும்; ஆனால் 333 ரூபாய் கொடுத்து வருகிறது. பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 529 ரூபாய் கொடுக்க வேண்டும்; ஆனால் 475 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 606 ரூபாய் கொடுக்க வேண்டும்; ஆனால் 475 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 529 ரூபாய் வழங்க அரசாணை போடப்பட்டது; ஆனால் 130 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.
ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மாநகராட்சிப் பகுதிகள், பள்ளிகள், அலுவலகங்களில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத்தெரிவித்து பேச்சுவார்த்தைக்குச் சென்ற போராட்டக்குழுவினர் மாநகராட்சி ஆணையரிடம் எதிர்ப்புத்தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
ஊதிய உயர்வுக்காக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பின்னர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிற்சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்றவுடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மேயர் கல்பனா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுமுக உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டம் தொடரும் என ஒப்பந்தப்பணியாளர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி கோவையில் பூக்கள் விலை உயர்வு