கோவை:கோயம்புத்தூரில் உள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பயிற்சி நடப்பதாக காணொலி ஒன்று இன்று காலை சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து பல்வேறு அமைப்புகள் இதற்கு கண்டனங்கள் தெரிவித்த நிலையில் ஆர்.எஸ்.புரம் போலீசார் அப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினர் அப்பள்ளிக்கு சென்றபோது அவ்வமைப்பினர் பயிற்சி முடித்து விட்டுச்சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இதற்கு கண்டனம் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.