கோவை:
72ஆவது குடியரசு தினவிழாவையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, வ.உ.சி மைதானத்தில் மூவர்ண கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு பேரணியை பார்வையிட்டார்.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு.ராசாமணி அதன்பின் சிறப்பாக செயல்பட்ட 140 காவலர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
திருப்பூர்:
குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பின்னர் சமாதான புறா மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டு திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 153 காவலர்கள், கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 97 மருத்துவ, சுகாதார துறை ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சேலம்:
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ராமன் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய 139 அரசு அலுவலர்களைப் பாராட்டி நற்சான்றுகளை வழங்கினார்.
நாமக்கல்:
குடியரசு தின விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். மேலும் காவல் துறையில் பத்தாண்டுகளாக அப்பழுக்கற்ற பணிபுரிந்த காவல் துறையை சேர்ந்த 43 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களையும்,152 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நீலகிரி:
நாடு முழுவதும் இன்று 72ஆவது குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நீலகிரி மவாட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடர்ந்து வீர தீர செயல் புரிந்த காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு துறை பணியாளர்கருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:இஸ்ரோ விஞ்ஞானியின் தந்தை காலமானார்!