சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் பார்வையாளர்களிடம் பேச சிறைத்துறை அனுமதி வழங்கினர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் கரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளதால் பார்வையாளர்களை அனுமதிக்க கோரி கைதிகள் மற்றும் அவரது உறவினர்கள் சிறை துறையிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் வருகிற பொங்கல் தினம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கைதிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்கி சிறைதுறை டிஜிபி சுனில் குமார் உத்தரவு பிறப்பித்தார்.
சிறைவாசிகளை நேர்காணல் செய்யும் விரும்பும் உறவினர்கள் eprisons visitors management system அல்லது அந்தந்த சிறைகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும். நேர்காணலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக பார்வையாளர்கள் வந்திருக்க வேண்டும்.
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாள்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்கள் உடல் வெப்பநிலையை சோதனை செய்தும், கைகளை கிருமி நாசினியால் கழுவி கொண்டும், முகக் கவசம் கட்டாயமாக அணிந்து கொண்டும் வரவேண்டுமென தெரிவித்திருந்தனர்.