கோயம்புத்தூர்: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு சார்பாக அணிவகுப்பில் கலந்து கொள்ளவிருந்த அலங்கார ஊர்தி ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், அலங்கார ஊர்திகளை மக்கள் பார்வையிடும் வகையில் தமிழ்நாடு முழுதும் அனுப்பி வைக்கப்படும் என உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, அலங்கார ஊர்திகள் முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தை வந்தடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் (பொ) ரா. கவிதா, சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா. ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கோ. வேடியப்பன் மற்றும் பொதுமக்கள் அலங்கார ஊர்தியை வரவேற்று பார்வையிட்டனர்.
அலங்கார ஊர்திகளை மக்கள் மேளதாளம் முழங்க கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனம் ஆடி பட்டாசு வெடித்து ஆர்வத்துடன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அலங்கார ஊர்தி கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் சென்றன.