கோவை மாவட்டம் சூலூர் அடுத்த காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்த தாமோதரசாமி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் காளப்பட்டி, கே.பி.கே நகர் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணராஜ் என்பவர் பொள்ளாச்சியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும், அவரிடம் தான் உட்பட பலர் நெக்ஸஸ் என்ற ஆன்லைன் டிரேடிங் கம்பெனி மூலமாக பணத்தை தருவதாக கூறி சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறியிருந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கிருஷ்ணராஜ் தனது மனைவி கல்யாணி மற்றும் உறவினர் சண்முகம் ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதில் பலர் முதலீடு செய்து அதில் பயன் பெற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிருஷ்ணராஜ் ஆன்லைன் டிரேடிங் கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளார். இதிலும் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று முதலீட்டாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இதனை நம்பி இந்த நிறுவனத்தில் ஈரோட்டைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவர் 75 லட்சமும், பிரசாந்த் என்பவர் 25 லட்சமும், மணி செந்தில் குமார் என்பவர் 28 லட்சமும், குரு மூர்த்தி என்பவர் 51 லட்சமும், குணசீலன் என்பவர் 25 லட்சமும், சிவக்குமார் என்பவர் 7 லட்சமும், ஹரி கிருஷ்ணன் என்பவர் 20 லட்சமும், கமலம் என்பவர் 70 லட்சமும் இதுபோக பலர் இதில் பல லட்சங்களை முதலீடு செய்துள்ளனர்.
கிருஷ்ணராஜ் முதலீட்டுக்கான லாபத் தொகையை முதலீட்டாளர்களுக்கு தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதை அறிந்த கிருஷ்ணராஜ் தனது மனைவியுடன் தலைமறைவானார்.
பொள்ளாச்சியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருந்த சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பேராசிரியர் கிருஷ்ணராஜ் மற்றும் கல்யாணியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.