கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இதில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து விசைத்தறி உரிமையாளர்கள் நூல் வாங்கி துணியாக நெய்து கொடுக்கின்றன.
இதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் கூலி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏழு வருடங்களாக கூலி உயர்வு வழங்காததை அடுத்து விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஒன்பதாம் தேதி(ஜன.9) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் முன்னிலையில் இதற்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி இந்தப் போராட்டமானது நடைபெற்று வருகிறது. கூலி உயர்வு தொடர்பாக அடுத்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டு கமிட்டி கூட்டம் சோமனூரில் நடைபெற்றது. இதில் கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து வரும் திங்கட்கிழமை தெக்கலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் அடுத்தகட்டமாக விசைத்தறி கூடங்களிலும், விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அரசின் கவனத்தை ஈர்ப்பது எனவும் அடுத்த கட்டமாக தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்களின் தலைமைச் சங்க நிர்வாகி கதிர் வேல்சாமி கூறுகையில், "இன்று நடைபெற்ற கூட்டு கமிட்டி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது, கூலி உயர்வு கிடைக்கும் வரை ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து அடுத்தடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மருத்துவப் படிப்பை தன்வசமாக்கிய ஏழை மாற்றுத்திறனாளி மாணவி