கோவை:கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டுக்குழுக் கூட்டம் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் நடைபெற்றது. சோமனூர் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கடந்த ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் - தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்களுடைய குறைகளைத் தெரிவிக்கும் வகையிலும், அவரது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பல லட்சம் தொழிலாளர்கள் அஞ்சலட்டை அனுப்புவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்ட அறிவிப்பு இது குறித்து சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "கடந்த ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் மிகவும் சிரமத்திற்கிடையே விசைத்தறி கூடங்களை இயக்கிவந்த நிலையில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் கூலி உயர்வு தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கும் நடைபெற்ற கூட்டத்தில் கூலி உயர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் இதுவரை ஏற்கனவே அறிவித்த கூலி உயர்வினை வழங்க மறுத்துவரும் நிலையில் கடந்த 9ஆம் தேதி முதல் கூலி உயர்வு வழங்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். இதன் காரணமாக நாளொன்றுக்கு 60 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்ட அறிவிப்பு இந்த நிலையிலும் கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் கண்டித்தும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு தங்களுடைய பிரச்சினையை எடுத்துச் செல்லும் விதமாக வரும் திங்கள்கிழமை விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக காரணம்பேட்டை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு அறிவித்த கூலி உயர்வை நடைமுறைப்படுத்தக் கோரி விசைத்தறி கூட்டமைப்பு சார்பில் சுமார் ஐந்து லட்சம் குடும்பங்கள் சார்பாக அஞ்சலகம் வாயிலாகக் குறுஞ்செய்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்புவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலும் கூலி உயர்வு வழங்காவிட்டால் அடுத்த கட்டமாக கூட்டுக்குழு கூடி அடுத்தகட்ட போராட்டங்களை அறிவிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: அரியலூர் மாணவி தற்கொலை: உரிய நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு அறிவுறுத்தல்