கோயம்புத்தூர்:நகரத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், முன்னாள் மத்திய அமைச்சர் முக. அழகிரிக்கு ஆதராவாகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இறுதியாண்டு பருவத் தேர்வைத் தவிர்த்து, அரியர் வைத்துள்ள மாணவர்கள் அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல இடங்களில் மாணவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகளையும், சுவரொட்டிகளையும் ஒட்டிவந்தனர்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி இச்சூழலில் இன்று கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி (வி.எல்.பி ஜானகியம்மாள்) சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் "எளிமை; தூய்மை; நேர்மை - மாணவர்களுக்கு வரம் தந்த கல்வி கடவுளே, நன்றிகளை அள்ளித்தருவோம்; நிலையான வாக்குகளாக!." என்ற வாசகங்களுடன் முன்னாள் மாணவர்கள் ரயில் நிலையம் பகுதியில் ஒட்டியுள்ளனர்.
இதேபோன்று கோவையில் குனியமுத்தூர் மதுக்கரை ஆகிய பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில் "மாணவர்களின் ஒளிவிளக்கே, எங்கள் ஓட்டு என்றும் உங்களுக்கே" என்று குறிப்பிட்டு 11 மாணவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. இது ஒருபுறம் என்றால், “உண்மை தொண்டனே, வெற்றியை உறுதி செய்ய வாரீர்” என்ற வாசகங்களுடன் மு.க.அழகிரிக்கு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது திமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முக அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டி நிகழாண்டு(2021) தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் திமுக கட்சியின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவார் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கும் வேளையில், மு.க. அழகிரிக்கு இது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.