தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நடுவழியில் கைதானவர்கள் இருந்த வாகனம் நிறுத்தப்பட்டது ஏன்? - பொள்ளாச்சி பாலியல் வழக்கு

நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு காவல் துறையினர் சலுகை காட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின், சேலம் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, இடையில் வாகனத்தை நிறுத்தி, குடும்பத்தினருடன், குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல் துறையினர் பேச வைத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு காவல் துறை சலுகை?
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு காவல் துறை சலுகை?

By

Published : Oct 20, 2021, 5:11 PM IST

Updated : Oct 20, 2021, 7:20 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர் (திருநாவுக்கரசு, சபரி ராஜன், மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ், பாபு, ஹெரைன் பால், அருளானந்தம், அருண்குமார்) இன்று (20.10.21) கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் கடந்த 21ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதில், விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்களின் சில நகல்கள் இன்று 9 பேரிடமும் வழங்கப்பட்டன.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டபின் வெளியில் வரும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்

பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் (161,164 ஸ்டேட்மென்ட்) நகல்கள் கைதான 9 பேருக்கும் வழங்கப்பட்டது. பின்னர், பாலியல் வழக்கின் விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், வெளியில் வரும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்

பாலியல் குற்றவாளிகளுக்கு காவல் துறை சலுகை?

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு காவல் துறை சலுகை?

இந்நிலையில் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருந்த காவல் துறை வாகனம், (TN 30 G 0453) கோவை சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, அங்கு காத்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களைச் சந்தித்து உரையாடினர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சலுகை?

குறிப்பாக, பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, சபரி ராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர்.

உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கிச் சென்றது.

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை, நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உறவினர்களைப் பார்க்க அனுமதித்தது ஏன் என்றும், எந்த அடிப்படையில் இதுபோன்ற சலுகைகள் அவர்களுக்கு காட்டப்பட்டது என்பதும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க வேண்டும் என்றால், முறையாக, நீதிமன்றத்தின் அனுமதியைப்பெற வேண்டும்.

ஆனால், கொடூர பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உறவினர்கள் சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களின் தரப்பு விளக்கத்தைப் பெறும் முயற்சியில் உள்ளது ஈடிவி பாரத். கிடைத்தவுடன் அந்த விளக்கமும் வெளியிடப்படும்.

இதையும் படிங்க: போக்குவரத்துக் காவலருக்கு பளார் விட்ட அமைச்சரின் உதவியாளர்; என்ன நடந்தது?

Last Updated : Oct 20, 2021, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details