கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டு பேருக்கும், புரவிபாளையம் உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கும், பனிக்கம்பட்டியில் தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகளுக்குச் சீல்வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளித்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கரோனா அறிகுறிகள் இருந்தால் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிகளுக்கு வரக் கூடாது என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக தலைமையாசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்:
- அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் செயல்பட வேண்டும்.
- எந்தவொரு சூழலிலும் மாணவா்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்படக் கூடாது.
- மேலும், காய்ச்சல், இருமல், உடல்வலி உள்பட ஏதேனும் கரோனா அறிகுறி இருந்தால் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு வரக் கூடாது.
- அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்துகொள்ளும்படி, அவா்களை அறிவுறுத்த வேண்டும்.
- தொற்று இல்லை என்பதை உறுதிசெய்து உடல்நலம் தேறியபின் பள்ளிக்கு வந்தால் போதுமானது.
இதையும் படிங்க: 4ஆவது டெஸ்ட்: இந்தியா வெற்றி