கோயம்புத்தூர்:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு 2017ஆம் ஆண்டிலிருந்து உதகை நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் இவ்வழக்கு தொடர்பாகப் பல்வேறு இடங்களில் தங்களது விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைய வளாகத்தில் கோடநாடு கொலை, கொலை தொடர்பான வழக்கு விசாரணை நடத்திவருகின்றனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர், அவரது உறவினர்கள், எஸ்டேட் மேலாளர் எனப் பலதரப்பினரிடம் காவலர் பயிற்சி மைய வளாகத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வழக்கு விசாரணை விரைவாக நடைபெறவும், சாட்சிகளை விரைவாக விசாரிக்க ஏதுவாக காவலர் பயிற்சி மைய வளாகத்தில் இந்த விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு (நவம்பர் 25) காவலர் பயிற்சி மைய வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது உடனே வெடிக்கப்போவதாகவும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவலர் பயிற்சி வளாகத்தில் வெடிகுண்டு செயல் இழப்புப் பிரிவினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் அங்கு வெடிகுண்டு இல்லாததால், அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் புலியகுளத்தைச் சேர்ந்த மோகனகாந்தி என்பவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரைப் பிடித்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: Covid-19 Vaccine Update: தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் இவ்வளவா?