கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே சொகுசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருப்பதாகவும் அதிலிருந்து மூட்டைகளில் ஏதோ ஒரு பொருளை ஆம்னி காரில் ஏற்றுவதாகவும் கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று இரு வாகனங்களையும் சோதனையிட்டனர். அப்போது சுமார் 553 கிலோ எடை கொண்ட பத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளில் குட்கா ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, உடனடியாக சொகுசு பேருந்து மற்றும் ஆம்னி வேனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பேருந்தை ஓட்டி வந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த முருகன் (36) மற்றொரு ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த செல்வம் (38) ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த இம்ரன் கான் என்பவர் ஒடிசா மாநிலத்திலிருந்து குட்காவை வாங்கி சொகுசுப் பேருந்தில் கடத்தி வந்து ஆம்னி காரில் கோயம்புத்தூர் கொண்டு செல்ல திட்டமிட்டு கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் வைத்து சொகுசு பேருந்தில் இருந்த மூட்டைகளை காரில் மாற்றிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.
இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான குட்கா வியாபாரியான இம்ரன் கான் மற்றும் அன்னூர் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆம்னி கார் ஓட்டுநர் பாபு ஆகிய இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 670 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: காரில் கடத்திய 4 பேர் கைது