கோயம்புத்தூர்:எட்டு வயது குழந்தையை சாலையோரம் விட்டு சென்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட அவிநாசி சாலை தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நேற்று (டிச.25) மதியம் இரண்டு மணியளவில் சாலையோரம் எட்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது. அக்குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் அவிநாசி மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் மருத்துவமனையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக திருப்பூர் மருத்துவர்கள் மேல் சிகிக்கைகாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தண்டுகாரன்பாளையம் மக்கள் செய்யூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது நேற்று (டிச.25) இரவு சுமார் 10:30 மணியளவில் தண்டுக்காரன்பாளையம் பகுதியில் ஒரு பெண் மயக்க நிலையில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் செய்யூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்து உடனடியாக அவ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பெண்ணை அவிநாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து விசாரணை மேற்கொண்டனர்.