கோவை:அன்னூர் அருகே உள்ள குன்னத்தூராம்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் ஆலையொன்றின் சேமிப்புக் கிடங்கில் இருந்து செல் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை சுகாதாரத்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் தடுத்து தொற்றுநோய் பாதிப்புகளிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தனியாரின் அரிசி ஆலைக்குச்சொந்தமான சேமிப்புக்கிடங்கிலிருந்து கடந்த சில மாதங்களாக, செல் பூச்சிகள் எனும் ஒரு வகை பூச்சியினங்கள் அதிகளவில் வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தங்களுக்கு ஏற்பட்ட இந்த சிரமம் குறித்து சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பலனுமில்லை என அப்பகுதியினர் வேதனைத்தெரிவிக்கின்றனர்.
இதன் ஒருபகுதியாக இன்று (செப்.12) அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களை அச்சுறுத்தும் அந்த செல் பூச்சிகளுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள் குன்னத்தூராம்பாளையம் கிராமத்தில் சுமார் 350-க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வரும்நிலையில், தங்கள் பகுதியிலுள்ள தனியார் ஆலையின் சேமிப்புக்கிடங்கில் இருந்து அதிகமான செல் பூச்சிகள் வெளியேறி ஊருக்குள் வருகின்றன.
ஆலையிலிருந்து வெளியேறும் செல் பூச்சிகள் மேலும், அந்த ஆலையில் இருந்து அதிகளவு தூசி காற்றில் பரவி வருவதால், உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதாகக் கூறினர். மேலும், அதே இடத்தில் வேறொரு சேமிப்புக்கிடங்கு அமைக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாவட்ட நிர்வாகம் அதனைத் தடுத்து நடவடிக்கை எடுத்து, மக்களைப் பாதுகாத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: உணவகத்தில் அழுகிய நிலையில் மீன்கள்...வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி