சென்னை:மாநகரின் நுழைவு வாயிலாக திகழும் பெருங்களத்தூரில் பல வருடங்கள் போக்குவரத்து நெரிசல் என்பது நிரந்தரமாக இருந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பெருங்களத்தூர் பகுதியில் பண்டிகை காலங்களில் பெரும் அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
அதேபோல் பெருங்களத்தூர் ரயில் நிலையம் கிராசிங் பகுதியில் மேம்பாலங்கள் இல்லாததால் பல மணி நேரம் வாகன ஓட்டிகள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளன. இதனால் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒரு வழி மேம்பாலம்:இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பெருங்களத்தூரில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் பெருங்களத்தூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மேம்பால திட்டத்தை கொண்டு வந்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு 234 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரில் இருந்து நெடுங்குன்றம் மார்கமாக மேம்பாலமும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக ஒரு மேம்பாலமும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
அதன் பின் கரோனா மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பால பணிகள் விரைவாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
பெருங்களத்தூரில் ஒரு வழி மேம்பாலம் திறக்கப்பட்ட போதிலும் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் ஒழிக்க முடியாது எனவும், பெருங்களத்தூர் ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் கட்டப்படும் மேம்பாலமும்,நெடுங்குன்றம் மார்கமாக கட்டப்படும் மேம்பாலம் விரைவாக கட்டப்பட்ட வேண்டும்.
பொதுமக்கள் கோரிக்கை: தமிழ்நாட்டில் எந்த ஆட்சியாக இருந்தாலும் குறிப்பிட்ட தேதியில் மேம்பால பணிகள் கட்டப்பட்டு குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதாக வரலாறு கிடையாது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே காலதாமதம் செய்யாமல் கிடப்பில் உள்ள அனைத்து பணிகளையும் முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாடிற்க்கு மேம்பாலங்களை கொண்டு வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.