கோவை ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வே கமிட்டி சேர்மன் ராதா மோகன்சிங் தலைமையில் 16 எம்.பி.க்களும் மற்றும் கோவை தெற்குத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள கைத்தறி ஆடைகளையும் பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாமோகன்சிங் தலைமையில் 16 எம்.பிக்கள் நேற்று(ஆக.18) கோவை வந்து, இன்று(ஆக.19) கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ரயில்வே அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று ரயில் நிலையத்தைப் பார்வையிட்டனர்.
’ஒன் ஸ்டேஷன்.. ஒன் புராடெக்ட்’ பிரதம மந்திரியின் திட்டம் எப்படி செயல்படுகிறது என நேரடியாக ஆய்வு செய்தனர். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பொருள்களை இங்கு கடை அமைத்து, விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை உருவாக்கி உள்ளது. குறிப்பாக தென் தமிழ்நாட்டிற்கு திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு கோவையிலிருந்து ரயில்வே சேவையைத் தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம்.
வடகோவை ரயில் நிலையத்தை இன்னும் சீரமைத்து கோவை மத்திய ரயில் நிலையத்தில் உள்ள கூட்டத்தைக் குறைக்க வடகோவையில் பயணிகள் ஏறி, இறங்கி செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம். கோவை ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது.