தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வலி நிவாரணி தந்த தீராத வலி!

மாடுகளுக்கு வலி நிவாரணியாக நாம் பயன்படுத்திய மருந்து, வனவிலங்கு உணவுச் சங்கிலியின் ஆகாய மருத்துவர்களான பாறு கழுகுகளைக் கொன்று ஒழித்த நிர்வாண உண்மைக் கதையிது..

வலி நிவாரணி
வலி நிவாரணி

By

Published : Oct 17, 2020, 4:31 PM IST

பசித்த வயிறும், வற்றிய உடலுமாக உணவு முகாமை நோக்கி ஊர்ந்து செல்லும் ஒரு சிறுமி; தொட்டு விடும் தூரத்தில் சிறுமியைப் பார்த்த படி அமர்ந்திருக்கும் ஒரு பாறு கழுகு என, தென்னாப்பிரிக்க புகைப்படக் கலைஞர் 'கெவின் கார்ட்டர்' எடுத்த இந்த ஒளிப்படத்திற்கு உலகத்தை உலுக்கிய படங்களின் பட்டியலில் எப்போதும் இடமுண்டு.

தெற்குச் சூடானின் உள்நாட்டுப் போரையும், பஞ்சத்தையும் உரக்கச் சொல்லிய அந்த படம், அச்சிறுமியின் நிலை என்னவானது என்ற கேள்வியை உலகம் முழுக்க எழுப்பியது. அந்த சிறுமிக்கு என்னவாகியிருந்தாலும், அருகிலிருந்த பாறு கழுகால் எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்ற உண்மையை உலகம் உணரவேயில்லை.

புறத்தோற்றத்தால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட உயிரினங்களில் பாறு கழுகுகளுக்கு முதலிடமுண்டு. காரணப் பெயர்களால் உயிரினங்களை அழைத்த தீந்தமிழ், இறந்த மிருகங்களின் உடல்களைத் தின்பதால், கேடு என பொருள் பட பாறு கழுகென்றே அழைத்தது. ஆங்கில அகராதியோ இவைகளைக் கொள்ளைக்காரனாக்கி, 'வல்சர்' என்று அழைக்கிறது. இன்று பொதுவாக வல்லூறு.

நோயுற்று இறந்த மிருகங்களின் அழுகிய உடல்களைத் தடம் தெரியாமல் தின்று தீர்ப்பதில் பாறு கழுகுகளுக்கு நிகர் பாறு கழுகுகளே! அதனாலேயே தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்பட்டன. உலகில் 74 வகையான கழுகு இனங்கள் உள்ளன. இந்தியாவில் ஒன்பது வகையான கழுகுகள் உள்ளன.

தமிழகத்தில், வெண்முதுகு, கருங்கழுத்து, சிவப்புதலை, மஞ்சள் முகக்கழுகுகள் என நான்கு வகைகள் உள்ளன. கடந்த 1990 - 92இல் நடந்த கணக்கெடுப்பின் படி, 40 லட்சமாக இருந்த பாறு கழுகுகளின் எண்ணிக்கை, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் 99 சதவீதம் அழிந்துள்ளது. இயற்கையில் இவ்வளவு வேகமான அழிவு, பாறு கழுகளைத் தவிர வேறு எந்த பறவைக்கும் நேர்ந்திருக்காது.

இந்தத் தீராத வலிக்கு காரணம் 'டைக்ளோஃபினாக்' எனப்படும் வலி நிவாரணி மருந்து. கடந்த 1990 களுக்குப் பின்னர் மாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்ட 'டைக்ளோஃபினாக்' மருந்தின் வீரியம், மாடுகள் இறந்த பின்பும் அதன் உடல்களில் தங்கிவிட, அவற்றைத் தின்று வாழ்ந்த கழுகுகள் வெகுவாகப் பாதிப்படைந்தன.

எந்த நோய் தொற்றுள்ள விலங்குகளின் உடல்களைத் தின்றாலும், செறிக்கக் கூடிய திறன் கொண்ட பாறு கழுகுகள் டைக்ளோஃபினாகிடம் தோற்றுப் போயின. இம்மருந்து பயன்படுத்தப்பட்ட மாட்டின் இறைச்சியைத் தின்ற பாறுக் கழுகுகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு விரைவாக வீழ்ச்சியடைந்தன.

சரி வானத்தில் வட்டமிட்டு, செத்ததைத் தின்று வந்த பாறுக்களின் வீழ்ச்சியால் இப்போது என்ன கேடு வந்தது என்ற இந்த கேள்விக்கு விடை சொல்கிறார் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், "இறந்த கால்நடைகளைச் சாப்பிட்டு வந்த பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தற்போது இறந்த கால்நடைகளை உண்ணும் காகங்கள், நாய்கள் பாதிக்கப்பட்டு அதன் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

இந்த பாதிப்புகள் குறித்து இளையத் தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக, செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை உலக வல்லூறுகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது என்றார்.

மனித மனங்களில் பாறு கழுகு பற்றிய எதிர்மறை எண்ணங்களின் வெளிப்பாடு தான் அவைகளை 'பிணந்தின்னி' என அழைக்கும் பொதுப் புத்தி. தமிழ்நாட்டில் கழுகுமலை, திருக்கழுகுன்றம் என வழிபாட்டுத் தலங்களை கழுகுகளின் பெயர் கொண்டு அழைக்கும் அளவுக்கு சிறப்பு பெற்றிருந்தாலும் மக்களின் மனதில் அவலட்சணமான பிணந்தின்னிகளாகவே பாறு கழுகுகள் நிலைத்து விட்டன.

கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் முருகானந்தம், பாறு கழுகுகள் இருக்கும் காடு வளமாகவும் செழிப்பாகவும் இருக்கும். வன விலங்குகளின் உணவு சங்கிலியில் முக்கியத்துவம் வாய்ந்த இவை வருடத்திற்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தூய்மைப் பணிகளை மேற்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறன.

வனப்பகுதிகளின் உயரமான மரங்களில் கூடுகட்டி வாழும் தன்மையுள்ள பாறு கழுகுகள், தற்போது முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனப்பகுதியில் 200 முதல் 250 பாறு கழுகுகள் மட்டுமே உள்ளன. இவற்றை பாதுகாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

ஓடுகிற வண்டியில் கடையாணி கழன்று விழுந்து குடை சாய்ந்து விடவாப் போகிறது என்ற போக்கில் இந்தக் கழுகுகளின் வீழ்ச்சியை நாம் கையாண்டோமானால், நம் பிள்ளைகளின் காலத்தில் இயற்கை என்னும் வண்டியில் அச்சாணி முறிய இன்றே நாம் காரணமாகிறோம். வாருங்கள் கொஞ்சம் விழித்துக் கொள்வோம்..

இதையும் படிங்க :மருத்துவக் குணம் மிகுந்த ஜாதிக்காய் ஊறுகாய்: களைகட்டும் விற்பனை

ABOUT THE AUTHOR

...view details