கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் சேவை இயங்கிவருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை முழுவதும் பற்சக்கரங்களால் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.
அண்டை மாநில சுற்றுலாப் பயணிகள்
மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளைத் தாண்டி இதமான சூழலில் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.
இந்நிலையில் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரயில் பாதையில் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.
மேலும்,தொடர் மழையின் காரணமாக மலை ரயில் சேவை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதிமுதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர்.