கோவை மாவட்டம், கோத்தகிரி மலையடிவாரத்தில் பவானி ஆற்றங்கரையோரம் ஓடந்துறை பஞ்சாயத்து அமைந்துள்ளது. இக்கிராமம் வாழைத் தோப்புகளும், பாக்கு மரங்களும் நிறைந்த பசுமையான பகுதி.
இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் நகரத்தின் வாடையை அறியாத மலைக்கிராம மக்கள். இக்கிராமத்தின் மீது உலக நாடுகளின் கண்களை திருப்பியவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம்.
சண்முகம் அவரின் மனைவி லிங்கம்மாள் ஆகியோர் 1996ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஓடந்துறை பஞ்சாயத்தில் பதவியில் இருந்தவர்கள்.
அந்த இருபது ஆண்டுக்காலமும் பஞ்சாயத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை அங்கீகரித்து மத்திய அரசு, நிர்மல் புரஸ்கார் விருது முதல் பாரத ரத்னா ராஜிவ் காந்தி சுற்றுச்சூழல் விருது வரை பல விருதுகளை வழங்கி கவுரவித்தது.
இதுமட்டுமின்றி 53 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்தக் கிராமத்தில் ஆய்வு செய்து பாராட்டி உள்ளனர். ஊராட்சியில் 850 தொகுப்பு வீடுகள், காற்றாலை மின்சாரம் என சண்முகம்-லிங்கம்மாள் தம்பதியினரின் சாதனையை அடுக்கிக்கொண்டே செல்லாம்.