தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநரகத்தால் புதிய படிப்புகள் தொடக்கம் - New courses launched by Directorate of Distance Education Tamil Nadu Agricultural University

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநரகத்தால் புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதிய படிப்புகள் தொடக்கம்
புதிய படிப்புகள் தொடக்கம்

By

Published : Aug 2, 2022, 7:27 PM IST

கோயம்புத்தூர்: லாலிரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படும் புதிய சான்றிதழ் படிப்புகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 2005–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மகளிர், இளைஞர்கள், பள்ளிப்படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் இவ்வியக்ககத்தின் வாயிலாக பல சான்றிதழ் பாடங்கள், இதர பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்குகிறது. தொலைதூரக் கல்வியை விரும்பும் நகர்புற வாசிகள் மற்றும் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளுக்காக இந்தப் பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமாரிப்புத் தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் இந்த ஆண்டு சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 44 வகையான ஆறுமாத கால சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

அவற்றில் தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள், காளான் வளாப்பு, மூலிகைப் பயிர்கள், தோட்டக்கலைப்பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர்பெருக்கமுறைகள், நவீன கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை, பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், தேனீ வளர்ப்பு, அலங்காரத் தோட்டம் அமைத்தல் ஆகிய பாடங்கள் பயில்வோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு முதல் மேலும் 12 வகையான புதிய பட்டயப்படிப்புப் பாடங்கள் இவ்வியக்ககத்தின் வாயிலாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் பண்ணைத் தொழில்நுட்பம், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், மூலிகை அறிவியல், தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள், பண்ணைக்கருவிகள் மற்றும் அதன் பராமரிப்பு, அங்கக வேளாண்மை, கரும்பு தொழில்நுட்பங்கள், வேளாண் கிடங்கில் தரக்கட்டுப்பாடு, வணிக ரீதியில் உயிரியல் பூச்சி மற்றும் உயிர் பூஞ்சான நோய் கொல்லிகள் உற்பத்தி, உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல், மருத்துவப் பயிர்கள் உற்பத்தி மற்றும் தர நிர்ணயம் மற்றும் தேயிலை உற்பத்தி மேலாண்மை உள்ளிட்ட பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றது.

பாடப் புத்தகங்கள் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டு, தொடர்ச்சியான கற்றலை மேம்படுத்துவதற்காக விளக்கப்படங்கள், அட்டவணைகள் போன்றவற்றுடன் அச்சிடப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் வேளாண்மைக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களிலும் இப்படிப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வழங்கப்படுகின்றன. இதனால் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழில்களை நிறுவ ஆர்வமுள்ளவர்கள், விவசாய சமூகத்தினர், தொழில்முனைவோர், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பிற ஆர்வமுள்ளவர்கள் இவ்வியக்ககத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details