கோயம்புத்தூர்: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.
இந்த யானைகள் உணவு, தண்ணீர் ஆகியவையைத் தேடி, அவ்வபோது மலையடிவாரத்திலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் வனப் பகுதியில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தண்ணீரைத் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்கு வந்த வண்ணமுள்ளது.
இச்சூழலில், பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ள நடிகர் சத்யராஜின் சகோதரிக்குச் சொந்தமான தோட்டத்தில் தண்ணீர் குடிக்க 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்ததால் அங்கிருந்த பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு ஓடினர்.
நடிகர் சத்யராஜ் சகோதரி வீட்டிற்கு படையெடுத்த காட்டுயானைகள் இதனைத் தொடர்ந்து அங்கு வந்த யானைகள் தண்ணீர் தொட்டியில் விளையாடி விட்டு, தண்ணீர் குடித்து சென்றன. இதனை வீட்டின் மொட்டை மாடியில் இருந்தவர்கள் படம்பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு யானைகளாக 15 யானைகள் தண்ணீர் தொட்டிக்கு வருவதும், அங்கு நீர் அருந்துவதும், பின்னர் திரும்பவும் வனப்பகுதிக்குள் செல்வதும் காணொலியில் பதிவாகியுள்ளது.