கோயம்புத்தூர்: ஓரடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து நடந்த இடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
நேற்றிரவு (செப்டம்பர் 6) கோவை செட்டிவீதிப் பகுதி கே.சி தோட்டம் பகுதியில் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் கட்டடத்தில் வசித்து வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தீயணைப்புத்துறையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதில் இருவர் உயிரிழந்த நிலையிலும், 5 பேர் பலத்த காயங்களுடனும் மீட்கப்பட்டனர்.
தற்போது கஸ்தூரி என்ற பெண் மட்டும் கட்டடத்தினுள் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் பார்வையிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் பேட்டி அப்போது பேசிய அவர், 'இரவில் இருந்து மீட்புக்குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு தகவல் அளித்துள்ளோம். இவர்களுக்கான நிவாரணம் வழங்க நான் முழு உதவியாக இருப்பேன். வீட்டிற்குப் பின்னால் உள்ள குளத்திற்கோ அல்லது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கோ இதில் சம்பந்தம் இல்லை. இந்த வீடு கட்டி நாற்பது ஆண்டுகாலம் இருக்கும் என்பதாலும் சரியான பராமரிப்பு இல்லாததாலும் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது' என்று அவர் தெரிவித்தார்.