கோயம்பத்தூர்: கரோனா தொற்று நோயாளிகளுக்காக கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய படுக்கை வசதிகளை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டார்.
கொடிசியா வளாகத்தில் அறிகுறிகள் இல்லாத கரோனா தொற்று நோயாளிகளுக்கு அலோபதி மற்றும் சித்த மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அங்குள்ள நான்கு அரங்குகளில் 1,286 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதில் 400 படுக்கைகளுக்கு கான்சன்ட்ரேட்டர்கள் மூலம் ஆக்சிஜன் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்ட உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கொடிசியா வளாகத்தில் நோயாளிகளுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் கேட்டறிந்தார்.
அதேசமயம், இம்மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஒப்பந்த அடிப்படையில் 75 மருத்துவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 15 மருத்துவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிசெய்ய ஆணையை அமைச்சர் வழங்கினார்.