கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கான சிறப்பு பிரிவை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று(ஜூலை.5) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "கோயம்புத்தூர் மாவட்டம் கரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள மாவட்டமாக இருந்தது. தற்போது, அரசின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது.
குணமடைந்தோருக்கான சிறப்பு பிரிவை திறந்து வைத்த அமைச்சர் தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூரில்தான் அதிகளவு உதவி செய்யும் தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் உள்ளனர். கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கண்டறிய சிறப்பு சிகிச்சைப் பிரிவு மாவட்ட அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
எக்மோ சிகிச்சை கருவி
அத்துடன் ரோட்டரி கிளப் மூலம் ரூ.75 லட்சம் மதிப்புள்ள எக்மோ சிகிச்சை கருவி ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்த மருத்துவமனையிலும் கிடையாது.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கருப்பு பூஞ்சை அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவமனையை அணுகினால் குணப்படுத்த இயலும்.
கரோனா மூன்றாம் அலை வரும் பட்சத்தில் அதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி மையங்களில் திமுகவினரால் டோக்கன்கள் வழங்கப்படமாட்டாது. மாநகராட்சி நிர்வாகிகள்தான் அதனைக் கவனிப்பர்" என்றார்.
இதையும் படிங்க:கரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி!