கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர். 36 வயதான இவர் தனக்கு பெண் பார்க்குமாறு அதே பகுதியைச் சேர்ந்த திருமண தரகர் சுரேஷ் (31) என்பவரிடம் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுரேஷ் தந்த தகவலின்பேரில், சந்திரசேகர் அன்னூர் அருகேயுள்ள கோயிலில் 15 வயதான 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய அந்த 15 வயது சிறுமி, குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு பணியில் இருந்த ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருந்ததால் வழக்கு சிறுமுகை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்தப் புகாரின்பேரில் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த சிறுமுகை காவல் துறையினர் புதுமாப்பிள்ளை சந்திரசேகர், திருமண தரகர் சுரேஷ் ஆகியோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்குத் தொடர்பாகச் சிறுமியின் உறவினர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: விரைவில் திருமணம் நடைபெற வேண்டி முதியவரின் தலையை வெட்டியவர் கைது