தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லாட்டரி மார்ட்டினின் காசாளர் குட்டையில் சடலமாக மீட்பு - lottery martin raid

கோவை: லாட்டரி மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனி என்பவர், காரமடை அருகே குட்டையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lottery martin

By

Published : May 4, 2019, 7:34 AM IST

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை பகுதியில் வசித்து வருபவர் பழனி (42). இவருக்கு சாந்தாமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், ரிசார்ட்டுகளில் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியா முழுவதும் 70 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மார்ட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகத்தினருடன் தொடர்புடைய முக்கிய நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் குறிப்பாக கவுண்டம்பாளையம் அருகே உள்ள மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரியில் பல்வேறு தரப்பினரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காசாளர் பழனியை தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின்போது அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தனது கையை அறுத்துக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நேற்று காலை மருத்துவமனையில் இருந்து குணமான பழனியை வருமான வரித்துறையினர் விடுவித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரே உள்ள குட்டையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

வருமான வரித்துறையினர் சோதனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காரமடை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details