கோவை மாவட்டம் பன்னிமடையைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
சிறுமியின் பிரேதபரிசோதனை அறிக்கையில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காவல்துறை சந்தோஷ் என்பவரை மட்டுமே கைது செய்துள்ளது தவறானது என்றும், இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோவை நீதிமன்றம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் மறைப்பதாக குற்றம்சாட்டிய வழக்கறிஞர்கள், பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். மேலும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி.பாண்டியராஜனுக்கு பணியிடை மாற்றம் மட்டும் போதாது. தேர்தல் முடியும் வரை அவருக்கு எவ்வித பொறுப்பும் அளிக்க கூடாது என்றும், அவர் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவழக்கறிஞர்கள் ஆஜராககூடாது எனவும் வழக்கறிஞர்கள்சங்கங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் பின்னணியில் உள்ள அமைப்புகளை பயன்படுத்துவதாகவும், இது போன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளை தடை செய்ய கோரியும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.