கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து மாலை நேரங்களில் வெளியேறும் ஒற்றை ஆண் யானை பாகுபலி விளை நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இந்த யானைக்கு ரேடியோ காலர் ஜடி பொருத்தி யானையை கண்காணிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக 'டாப்சிலிப்' யானைகள் வளர்ப்பு முகாமிலிருந்து மூன்று கும்கி யானைகளை இறக்க திட்டமிடப்பட்டது.
ரேடியோ காலர் பொருத்த கும்கி யானைகள்
அதன்படி கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய 3 கும்கி யானைகள் ஜூன் மாதம் வரவழைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்த மருத்துவ குழுவினர் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர்.
போக்கு காட்டும் பாகுபலி யானை ஜூன் 27ஆம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலியானைக்கு மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்த தயாராக இருந்த நிலையில், வனத்துறையின் பிடியில் சிக்காமல் யானை வனப்பகுதிக்குள் சென்றது.
மன உளைச்சலுக்குள்ளான யானை
யானையை வனத்துறையினர் தொடர்ந்து பின் தொடர்ந்ததால், அதன் மனநிலை சற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இயல்பு நிலை திரும்பும் வரை 10 நாட்கள் கண்காணித்து, பின்னர் யானைக்கு ரேடியோ காலர் ஐடி பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.
கைவிடப்பட்ட திட்டம்
தொடர்ச்சியாக அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், பாகுபலி யானை நெல்லிமலை காப்புக் காடு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதாலும், மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் ஜடி பொருத்தும் திட்டத்தை தற்காலிகமாக வனத்துறையினர் கைவிட்டனர்.
இதனையடுத்து இந்த பணிக்காக வரவழைக்கப்பட்ட கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய மூன்று கும்கி யானைகளும் மீண்டும் டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.