கோவையில் பிரசித்திப் பெற்ற கோனியம்மன் கோயில் திருத்தேரோட்டம் நாளை (மார்ச் 3) நடைபெறவுள்ளது. இதனால் கோவை தேர்முட்டி, பிரகாசம், வெரைட்டிஹால் சாலை முழுவதும் கோலாகலமாக காணப்படும்.
வழக்கமாக இந்தத் தேரோட்டத்தின்போது காந்தி பூங்கா, உக்கடம், செல்வபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வழிநெடுக இலவச நீர்மோர் பந்தல், உணவுகள், பழங்கள் போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்குவார்கள். பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படும்.
இம்முறை கரோனா தொற்று காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவுள்ளனர். இலவச நீர்மோர் பந்தல் போன்றவை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வைக்க வேண்டும் எனவும் முடிந்தவரை ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இயன்றவரை தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிந்து வர வேண்டும், நீர்மோர் பந்தல் உணவு வழங்கும் இடங்களில் கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.