கோயம்புத்தூர்: கேரள மாநிலம் பட்டம்பி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தங்கல் (60). இவர், கேரள காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். பட்டம்பி நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில், தங்கல் கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல இருந்தார். இதற்காக பட்டம்பியில் இருந்து காரில் கோயம்புத்தூர் வந்தடைந்தார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு தங்கல் வந்த போது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது அவரது கைப்பையில் 22 எம்.எம். கைத்துப்பாக்கி மற்றும் ஏழு தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கைத்துப்பாக்கி பயன்படுத்தும் நிலையில் இல்லாததும் தெரியவந்தது. இது குறித்து தங்கலிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரணை செய்த போது, சொந்த பாதுகாப்பிற்காக வைத்திருப்பதாகவும், உடைமைகளோடு துப்பாக்கி இருந்தது குறித்து தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.