பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - போராட்டம் நடத்த சென்ற கனிமொழி தடுத்து நிறுத்தம்! - pollachi sexual violence case
09:27 January 10
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக போராட்டம் நடத்த கோயம்புத்தூரிலிருந்து - பொள்ளாச்சி சென்றபோது கனிமொழி தடுத்து நிறுத்தப்பட்டார். காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில் இன்று திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. இதற்காக கோயம்பத்தூருக்கு வந்த கனிமொழி, சாலை மார்கமாக பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது கற்பகம் கல்லூரியின் அருகில் காவல் துறையினர் தடுப்புகளைப் போட்டு தடுத்ததால், கோவை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரிலிருந்து இறங்கிய கனிமொழியும் சாலையிலேயே அமர்ந்து காவல் துறையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, திமுகவினர் பொள்ளாச்சிக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.