கோயம்புத்தூர்:பார்க்க பார்க்க சலிக்காத விஷயங்கள் இரண்டு. சின்ன சின்னதாய் துள்ளி வந்து செல்லம் கொஞ்சும் அலை கடல்; சின்னச் சின்ன எட்டு வைத்து ஆடி வரும் யானை. இரண்டும் அதனதன் எல்லைக்குள் இருக்கும் வரையில் மட்டுமே மனித மனம் அதனை ஆராதிக்கிறது. மனித ஆக்கிரமிப்புகளால் கடலும் களிறும் எல்லை மீறும் போது, அய்யகோ ஆபத்து என கூக்குரலும் நம்மிடமிருந்துதான் வருகிறது. வலியவன் வாழ்வானென்ற வறட்டு கவுரவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மனித மிருக மோதல்களை தவிர்க்க முயற்சிக்கும் நேரம் இது.
இந்தியாவில் நிகழும் மனித - மிருக மோதல்களில் பிரதானமானது யானை - மனிதன் மோதல். கடந்த சில வருடங்களாகவே அதிகரித்துவரும் இந்த மோதல் இயற்கையை சமன்குலைக்கும் வகையில் நடந்து வருகிறது.
நிலத்தில் வாழும், உயிரினங்களில் மிகப் பெரியது யானை. இப்பெருஉயிர் தன் உணவுத் தேவைக்காக தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. அதே போல் யானை உட்கொள்ளும் உணவில் 40 விழுக்காடு மட்டுமே செரித்து சக்தியாக மாறுகிறது. அதனால் சாப்பிடுவதும், நடப்பதும் யானையின் தேவையாக இருக்கிறது.
வலசை எனப்படும் யானையின் இந்த வாழ்வாதாரப் பயணம், யானைகளின் மரபுவழி தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த பயணப்பாதையில் மனித ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் தான் பிரச்னைக்கான ஆரம்பப் புள்ளி. தமிழ்நாட்டில், கோவை வனக் கோட்டம் என்பது யானைகளின் வளர்ச்சிப் பாதையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரளாவில் இருந்து வரும் யானைகள் கோவை வழியாக பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு சென்று, பின்னர் ஈரோடு மாவட்டம், தெங்குமரடா சென்று அங்கிருந்து முதுமலை புலிகள் சரணாலயம் வழியாக, தமிழ்நாடு கேரளா கர்நாடகா மாநிலங்கள் சந்திக்கக்கூடிய முத்தங்கா யானைகள் புலிகள் சரணாலயம் வரை பயணிக்கின்றன என்கிறார் விலங்கு நல ஆர்வலர் மோகன் குமார்.
யானைகளின் இந்த வலசைப் பாதைகளில், தற்போது கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள் என தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளதால், கோவை வனக் கோட்டத்தில் மனித மிருகம் மோதல் என்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க யானை வழித்தடங்களை மீட்டெடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தை பொருத்தவரை மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பகுதியில் இரண்டு வழித்தடங்களும், கோவை போளுவாம்பட்டி பகுதியில் ஒரு வழித்தடமும் யானைகளின் வலசை பாதையாக உள்ளது எனக்கூறும் மோகன், தற்போது ஆக்கிரமிப்பில் உள்ள இந்த தடங்கள் மீட்டெடுத்தால் யானைகள் ஊருக்குள் வருவது வெகுவாக குறையும் என தெரிவித்தார்.