கோயம்புத்தூர்: காட்டேரி வனப்பகுதியில் கடந்த 8ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் முப்படைகளின் தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்வதற்கு கடைசி சில நொடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ நேற்று (டிச 9) வெளியானது. கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோ(joe) என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ”நானும் என்னுடைய நண்பர் நாசரும், அன்றைய தினம் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றோம். ரயில் தண்டவாளத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வருவதை பார்த்தோம். அதனை வீடியோ எடுக்கும் பொழுது அந்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்திற்குள் சென்ற 4, 5 நொடிகளில் வெடிக்கும் சத்தம் கேட்டது.
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வீடியோ எடுத்தவர்களின் பரபரப்பு பேட்டி - பிபின் ராவத் விமான விபத்து
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இறுதி நொடிகளை கோவையைச் சேர்ந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அவர்கள் அளித்த சிறப்பு பேட்டியை பார்க்கலாம்.
பிறகு சம்பவ இடத்திற்கு செல்லலாம் என்று நினைத்த போது காவல் துறையினர் அந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே, நாங்கள் அங்கிருக்கும் ஒரு நண்பர் இல்லத்திற்கு சென்று விட்டோம். பின்னர் தான் முழு சம்பவம் பற்றியும் செய்திகள் மூலம் அறிந்தோம். அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு யாரும் இல்லாத காரணத்தால் அங்கிருந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்றோம்.
அங்கிருந்த இரண்டு காவலர்கள் சம்பவ இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தினர். சம்பவ இடத்தில் தேவராஜன் என்ற இன்ஸ்பெக்டரிடம் வீடியோவை அளித்து விட்டு நாங்கள் திரும்பி விட்டோம். ஹெலிகாப்டர் அடர்ந்த பனி மூட்டம் நிறைந்த பகுதியில் தான் சென்றது. அதன் பிறகுதான் விபத்திற்குள்ளான சத்தம் கேட்டது” என தெரிவித்தார்.
அதனையடுத்து பேசிய நாசர், ”எனது நண்பர் ஹெலிகாப்டரை வீடியோ எடுத்தார், அப்போது அந்த ஹெலிகாப்டர் மர கிளையில் பட்டு கீழே விழுந்த சத்தம் கேட்டது. அப்போது தான் நாங்கள் மிகவும் பதற்றம் அடைந்தோம். அதனைத் தொடர்ந்து நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்ற பொழுது அங்கு இருக்கும் ஒரு காவல்துறை அலுவலரிடம் வீடியோவை அளித்து விட்டு நாங்கள் புறப்பட்டோம். முதலில் அந்த ஹெலிகாப்டர் தெளிவாக தெரிந்தது. பின் பனி மூட்டத்தில் சென்ற 2 நொடிகளில் விபத்திற்குள்ளான சத்தம் கேட்டது. மரக்கிளைகளுக்குள் மோதி கீழே விழுந்த சத்தம் நன்கு கேட்டது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிபின் ராவத்திற்கு இறுதி மரியாதை