தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணத்திற்காக குழந்தையை விற்றுவிட்டு விசாரணைக்கு வர மறுத்த தம்பதி: போலீஸ் வலைவீச்சு!

கோவை: கருமத்தம்பட்டியில் இரு மாத ஆண் குழந்தையை விற்க முயன்ற கும்பல், குழந்தைக்கு எச்ஐவி சோதனை செய்ய தனியார் மருத்துவமனைக்குச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குழந்தை புரோக்கர்கள் ஹசீனா உள்பட மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

illegal child sale in Coimbatore women arrested
illegal child sale in Coimbatore women arrested

By

Published : Dec 19, 2019, 4:40 AM IST

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சாலையில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அங்கிருந்த காவல் துறையினரும் பொதுமக்களும் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தை விற்பனை தொடர்பாக சண்டையிட்டுக் கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து இரண்டு மாத குழந்தையுடன் பெற்றோர்கள் கண்ணன், ஜோதி ஆகியோரையும், குழந்தை புரோகர்கள் ஜாகிர் உசேன், ஹசீனா, கல்யாணி ஆகியோரையும் கருமத்தம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் குழந்தை புரோக்கருமான ஜாகிர் உசேன், ஈரோட்டைச் சேர்ந்த குழந்தை புரோக்கர் ஹசீனா, கல்யாணியிடம் ரூ. 2.5 லட்சம் பணம் கொடுத்து ஆண் குழந்தை கேட்டு வந்ததாகவும், இதற்காக மதுரையில் இருந்து கண்ணன் - ஜோதி தம்பதியினரின் ஆண் குழந்தையை விற்பதற்காக அழைத்து வந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது குழந்தைக்கு எச்ஐவி பரிசோதனை செய்ய கருமத்தம்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு எச்ஐவி பரிசோதனை செய்யமுடியாது என மறுத்து அவர்களை திருப்பி அனுப்பி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைக்கு குழந்தையின் தாய் ஜோதி, புரோக்கர்கள் ஹசீனா, கல்யாணி ஆகியோர் சென்று வந்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புவனேஸ்வரி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புரோக்கர்கள் ஹசீனா, கல்யாணி, ஜாகீர் உசேன் ஆகியோரிடமும், குழந்தையின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் குழந்தையை பணத்திற்காக விற்க திட்டமிட்டிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து ஐந்து பேர் மீதும் புவனேஸ்வரி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், புரோக்கர்கள் ஹசீனா, கல்யாணி, ஜாகீர் உசேன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது இரவில் வீட்டுக்குச் சென்றுவிட்டு காலையில் வரவேண்டும் என கண்ணன் ஜோதி தம்பதியினரிடம் காவல் துறையினர் தெரிவித்ததை அடுத்து குழந்தையுடன் சொந்த ஊரான மதுரைக்குச் சென்றனர்.

இந்நிலையில், அவர்களை தொலைபேசி மூலம் அழைத்த காவல் துறையினர் மீண்டும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வரும்படி கூறினர். ஆனால் அவர்கள் இருவரும் வர மறுத்த நிலையில், கருமத்தம்பட்டி காவல் நிலையத்திலிருந்து தனிப்படை காவல் துறையினர் மதுரைக்கு விரைந்துள்ளனர். குழந்தையை விற்க முயன்றதாக கண்ணனையும், ஜோதியையும் கைது செய்து அழைத்து வர தனிப்படை காவல் துறையினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட ஜாகிர் உசேன் மதுக்கரை பகுதியில் திமுக ஆட்டோ தொழிற்சங்கத்தின் துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பதற்றமான சூழலில் சென்னை பல்கலை... நள்ளிரவில் மாணவர்கள் அதிரடி கைது!

ABOUT THE AUTHOR

...view details