கோயம்புத்தூர்: சுங்கம் பகுதியில் செயலப்பட்டு வரும் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரிக்கு (IAFC) கடந்த மாதம் 15ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 அலுவலர்கள் பயிற்சிக்காக வந்துள்ளனர்.
அப்போது பயிற்சிக்கு வந்த பெண் விமானப்படை அலுவலர் ஒருவர், தான் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதியன்று ஓய்வெடுத்திருந்த நிலையில், அங்கு பயிற்சிக்காக வந்த விமானப்படை லெப்டினன்ட் அமிதேஷ் ஹர்முக் எனும் சக அலுவலர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக செப்டம்பர் 20ஆம் தேதி கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஒருநாள் காவல்
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 25ஆம் தேதி அமிதேஷை கைது செய்து நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தினர். விமானப்படை அலுவலர் என்பதால் இந்த வழக்கை மாநகர காவல் துறையினர் விசாரிக்க இயலாது என அமிதேஷ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தார்.
அதேசமயம் காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதியிடம் அவகாசம் கேட்ட நிலையில், ஒருநாள் மட்டும் காவலில் எடுக்க நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார். இதனையடுத்து, 25ஆம் தேதி அன்றே அமிதேஷை உடுமலைப்பேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர். அவர் மீது 376 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாங்கள் விசாரித்துக்கொள்கிறோம்
இதனையடுத்து, செப்டம்பர் 27ஆம் தேதி கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர், விமானப்படை பயிற்சி கல்லூரி அலுவலர்கள், கைதான அமிதேஷ் ஆகியோர் ஆஜராகினர். இவ்வழக்கு விசாரணையின் போது இச்சம்பவம் விமானப்படை வளாகத்தில் நடந்திருப்பதால், விமானப்படையினரே விசாரித்து கொள்கிறோம் என விமானப்படை அலுவலர்கள் நீதிபதி திலகேஸ்வரியிடம் கூறினர்.
ஆனால், இந்த வழக்கை விமானப்படை விசாரித்தால் தனக்கு நீதி கிடைக்காமல் போய்விடும் என்றும், எனவே காவல் துறையினரே விசாரிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது. அதில், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், "நான் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்று இரவு அறையில் மதுமயக்கத்தில் இருந்தபோது அலுவலர் அமிதேஷ் என்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதுகுறித்து, மறுநாளே விமானப்படை பயிற்சி கல்லூரியில் புகார் அளித்தும் உயர் அலுவலர்கள் புகாரை வாங்காமல் அலைக்கழித்தனர். இந்தப் புகாரைத் திரும்பப் பெற உயர் அலுவலர்கள் வற்புறுத்தினர்.