கோயம்புத்தூர்:2017ஆம் ஆண்டு தனியார் நாளிதழின் முயற்சியாக கோவை, மதுரை, சென்னை நகரங்களில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்னும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக செயல்பட்டதால், அரசு சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. அதன்படி நகரின் குறிப்பிட்ட பகுதியில், ஞாயிற்று கிழமை தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரை சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் பொது மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவர்.
இந்த நிகழ்ச்சி கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் மீண்டும் தொடங்கியது. ஆனால் கோவையில் தொடங்காமல் இருந்துவந்தது. இந்த நிலையில் நேற்று (செப்.18) முதல் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' மீண்டும் தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள டி பி ரோட்டில், தலைமை தபால் அலுவலகம் முதல் மேக்ரிகார் சாலை வரையான பகுதிகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6 மணி முதல் ஒன்பது மணி வரை குழந்தைகள் சாலையில் சைக்கிள் ஓட்டியும், விளையாடியும் மகிழ்ந்தனர்.