கோயம்புத்தூர்:பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன்படி இந்தாண்டு குண்டம் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான மயான பூஜை கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை (பிப்ரவரி 17) சுமார் 9 மணியளவில் தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர், தமிழ்வாணன், புலவர் லோகநாதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டிவிட்டார்.
அதன்பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். கொடியேற்றம் நாளிலிருந்து விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர்.