தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பசுமை வீடுகள் கட்டுமானப் பணி நிறுத்தம்: தவிப்பில் பழங்குடியின மக்கள்.. - பழங்குடியின கிராமங்கள்

கோவையில் பசுமை வீடுகள் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளதால், சாலை ஓரத்தில் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர்.

கட்டி முடிக்கப்படாத குடியிருப்புகள்
கட்டி முடிக்கப்படாத குடியிருப்புகள்

By

Published : Jun 21, 2022, 10:54 PM IST

கோவை மாவட்டம் இக்கரைபூலுவம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களில், சோலார் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஏற்கனவே வசித்துவந்த வீடுகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. 88 வீடுகளுக்கு முதலைமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை சார்பில் வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கிய நிலையில் இரண்டு வருடங்களாகியும் அப்படியே உள்ளது.

தவிப்பில் பழங்குடியின மக்கள்

இதில் நரசிபுரம் அருகே உள்ள பட்டியார் கோவில்பதியில் உள்ள இருளர் சமுதாயத்தை சார்ந்த 25 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் அப்படியே உள்ளதால் பயனாளிகள் சாலை ஓரத்தில் உள்ள குடிசையில் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பழங்குடியின மக்கள் கூறுகையில், தாங்கள் ஏற்கனவே வசித்த வீடுகள் சிதிலமடைந்த நிலையில் அதனை மாற்றி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் பணிகள் தொடங்கிய நிலையிலேயே இன்றும் உள்ளதால் சாலை ஓரத்தில் குடிசை போட்டு வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருகிறோம். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசிப்பது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில வீடுகள் 90 சதவீத பணிகள் முடிந்தாலும் முழுமையாகத காரணத்தினால் பயனாளிகளுக்கு வழங்கப்படாததால் கட்டப்பட்ட வீடுகளும் பராமரிப்பின்றி உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த ஆட்சிக்காலத்தில் சோலார் உடன் கூடிய பசுமை வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டும் பணிகள் தொடங்கிய நிலையில் நிதி இல்லை என கட்டுமான பணியை நிறுத்தியதால் இந்த சூழல் நிலவுவதாகவும் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி விரைவில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையினரின் அசத்தும் யோகாசன புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details