கோவை மாவட்டம் சோமையம்பாளையம் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டித் தந்த வீடுகளில் கழிவறை வசதி செய்து தராததால் இரண்டு ஆண்டுகளாக மக்கள் அவதிப்படுதாகவும், விரைவில் அதை கட்டித் தரக் கோரியும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கழிப்பறை வசதியில்லாமல் அரசு கட்டித் தந்த வீடுகள் - தவிக்கும் மக்கள் - government scheme hosues without toilet
கோவை: அரசு கட்டித் தந்த வீடுகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தராததால், அதனை கட்டித் தர வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனு அளிக்க வந்தவர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அரசு கட்டித் தந்த வீட்டில் உள்ள கழிப்பறையில் குழி தோண்டாமல் கழிப்பறை கட்டித் தந்தனர். இதனால் எங்களால் கழிப்பறையை உபயோகப்படுத்த முடியவில்லை. பெண்கள் காலைக்கடன் கழிக்க வெளியிடங்களுக்குதான் போக வேண்டியதுள்ளது. இதில் பெண்களே மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து கூறியதற்கு இன்னும் 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்”, என்றார்.
இன்னும் சிலர் கூறுகையில், ”கழிப்பறையை முதலில் நீங்களே கட்டிக் கொள்ளுங்கள், அதற்கான பணத்தை பின்னர் அரசு தந்துவிடும் என்று கூறினார்கள். அதை நம்பி கழிப்பறை வசதியை நாங்கள் செய்தோம். ஆனாலும் இதுவரையில் அரசிடமிருந்து எவ்வித பணமும் வரவில்லை” என்று தெரிவித்தனர். மேலும், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களுக்கு கழிவறை கட்டித் தர வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகக் கூறினர்.