கோவைமாவட்டம் அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர். அன்னூரைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஆட்டுச் சந்தையில் அலைமோதும் கூட்டம்:வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். ரம்ஜான் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், வார இறுதி நாளான இன்று (ஏப்.16) அன்னூர் சந்தையில் அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆட்டுச் சந்தை தொடங்கியதும் வியாபாரிகளும் விவசாயிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர்.
குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் திரண்டுள்ளனர். வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி, ஆடுகள் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.