தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோவை தங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வால்பாறை தொகுதியில் 30 வயதில் போட்டியிடுவதற்கு எனக்கு இந்திராகாந்தி வாய்ப்பளித்தார். 1998 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மூப்பனார் வாய்ப்பளித்தார். வால்பாறை மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வை நான் பெற்றுத் தந்திருக்கிறேன். வால்பாறை தொகுதியைத் தவிர வேறு எந்த தொகுதியிலும் நிற்க எனக்கு உடன்பாடு இல்லை.
அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை வாங்க வேண்டாம் என்றும், சைக்கிள் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடலாம் என்றும் வாசனிடம் கூறினேன். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை. அவர் என்னை கைவிட்டதோடு, எனக்கு எதிராக சதியும் துரோகத்தையும் இழைத்து விட்டார். காங்கிரசிலிருந்து விலகி தமாகாவில் சேர்ந்ததற்கு தற்போது வருந்துகிறேன்.