கோயம்புத்தூர்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகமான ஜீவா இல்லத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராஜா செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”சிபிஐ கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் ஜனவரி 26-28ஆம் தேதி வரை கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. அகில இந்திய மாநாடு அக்டோபர் மாதம் 14-18 வரை விஜயவாடாவில் நடைபெற உள்ளது.
தற்பொழுது பாஜக, ஆர்எஸ்எஸ் மூர்க்கத்தனமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. நாட்டில் மதவாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையாக இருப்பதால், அதனை நிறைவேற்ற மதம், சாதி, மொழி, கலாசாரத்தின் பெயரில் மக்களைப் பிளவுப்படுத்திவருகின்றனர்.
இதனைச் சாதிப்பதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் பயன்படுத்திவருகிறது. கோயம்புத்தூரில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தனியார் பள்ளிகளில் சாகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தப் பயிற்சி வன்முறையைத் தூண்டும் பயிற்சி.
'பிரதமரின் கொள்கை' - கார்ப்பரேட்
பொது நிறுவனங்களை மத்திய பாஜக தகர்த்துவருகிறது. பிரதமர் பின்பற்றும் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் கொள்கையாக உள்ளது. பசி பட்டினியில் உள்ள நாடுகளில் 116 நாடுகளில் 106 இடத்தில் இந்தியா உள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.