தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் ஒரு அத்திப்பட்டி: 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பழங்குடிகள்!

கோயம்புத்தூர்: குடிநீர், மின்சாரம், சாலை, மருத்துவமனை, சுடுகாடு இவையெல்லாம் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளாக வரையறுக்கப்படுபவை. ஆனால், இவையெல்லாம் என்னவென்றே தெரியாத ஊர்களும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. ஒருவேளை அது நிலப்பகுதியாக இருந்திருந்தால் அலுவலர்களின் பார்வையோ, அரசியல்வாதிகளின் கரிசனமோ கிடைத்திருக்கக்கூடும். ஆனால், மலையடிவாரமாகிப்போனதால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நினைவுக்கு வரும் பழங்குடிகள் வாழ்வின் அவலத்தை இதோ நாம் இங்கு பதிவு செய்கிறோம்...

village
village

By

Published : Mar 11, 2020, 10:19 AM IST

கோவை மாவட்டம் போளுவாம்பட்டியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மூலக்காடுபதி கிராமம். இங்கே 20-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்துவருகின்றன. பல தலைமுறைகளாக இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்துவருகின்றனர் பழங்குடியின மக்கள்.

மேலும் இப்படி ஒரு பழங்குடியினர் கிராமம் இருப்பதே வெளியில் தெரியாத அளவிற்கு மலையடிவாரத்தில் இவர்கள் வசித்துவருகின்றனர். மின்சாரம், தண்ணீர் வசதிகள் ஏதுமின்றி குடிசை வீடுகளில் வசித்துவரும் இவர்களுக்கு, இதுவரை எந்த ஒரு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்துகொடுக்கப்படவில்லை.

இவர்களுக்குத் தேவையான குடிநீரை மலையில் உற்பத்தியாகும் சுனை நீரிலிருந்து சிறிய குழாய் மூலம் வீடுகளுக்கு கொண்டுவருகின்றனர். அதுவும் பலநேரங்களில் யானைகள் குடிநீர் குழாய்களை உடைத்துவிடுவதால் குடிநீருக்காகப் பல நாள்கள் சிரமப்படும் சூழல் அங்கு நிலவிவருகிறது.

மின்சார வசதி இல்லாததால் குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிப்பதாகவும், அதற்கு மேல் வெளியே செல்ல பேருந்து வசதிகள் ஏதும் இல்லாததால் குழந்தைகள் படிப்பதும் இல்லை என வேதனைத் தெரிவிக்கின்றனர் இம்மக்கள்.

மேலும் தங்களுடைய கிராமத்தில் நோய்வாய்ப்பட்டு உடல்நலக் குறைவால் யாராவது உயிரிழந்தால் மலையின் மேல் பகுதிக்குச் சென்று பின்னர் பள்ளத்தாக்கு வழியாக உடலை அடக்கம் செய்ய எடுத்துச்செல்ல வேண்டிய சூழல் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க தங்களுடைய கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இங்கு உள்ள இளைஞர்களுக்கு உறவினர்களே பெண் கொடுக்க மறுப்பதாகவும், இதனால் பலர் திருமணமாகாமல் மூப்பெய்தி இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, தங்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து குழந்தைகளை உயர் கல்விக்கு அனுப்ப உதவ வேண்டுமெனவும், யானை உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள தங்களுடைய வீடுகளுக்கு மின் வசதி செய்துதர வேண்டும் எனவும் மூலக்காடுபதி கிராம பழங்குடியின மக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

இதையும் படிங்க: விவசாயிகளின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய கொரோனா

ABOUT THE AUTHOR

...view details