தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆட்டம் போட்ட சிறுத்தை ஓட்டம் பிடித்ததா? - தேடும் பணியில் வனத்துறையினர் - மாயமான சிறுத்தை

பாப்பாங்குளத்தில் சோளக் காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பையும் மீறி காணாமல் போனது குறித்து ஆய்வு செய்யப்படும் என திருப்பூர் மாவட்ட துணை வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை
சிறுத்தை

By

Published : Jan 25, 2022, 9:16 PM IST

திருப்பூர்:அவினாசி அருகே பொதுமக்களைத் தாக்கிய சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அவிநாசி தாலுகா, பாப்பாங்குளம் பகுதியில் நேற்று (ஜன.24) காலை 6 மணி அளவில் வரதராஜன் மற்றும் மாறன் என்ற இருவரை சோளக் காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது.

சிறுத்தை நடமாட்டம்

அதைக் காண வந்த மேலும், இரண்டு பொதுமக்களையும் சிறுத்தை தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

உடனடியாக வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர் சம்பவ இடமான பாப்பாங்குளம் வந்தனர்.

சிறுத்தையைப் பிடிக்கும் பணி

சிறுத்தை பதுங்கியிருந்த சோளக்காட்டை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நேற்று(ஜனவரி 24) மாலை வனத்துறையினர் சோளக் காட்டை சுற்றி ரோந்து சென்றபோது, வன அலுவலர் வீரமணிகண்டனை சிறுத்தை தாக்கியதில் லேசான காயம் அடைந்தார்.

சிறுத்தையைப் பிடிக்கும் பணிகள் தீவிரம்

உடனடியாக சோளக்காட்டை சுற்றி சிறுத்தையைக் கண்காணிக்க 12 கேமராக்கள் பொருத்தப்பட்டு நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் 3 கூண்டுகள் வைத்து கூண்டுகளுக்குள் மாமிசங்களை வைத்தனர்.

நேற்று மாலைக்குப் பிறகு சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இரவு முழுவதும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என வனத்துறையினரும் காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

ஆட்டம் காட்டும் சிறுத்தை

இந்நிலையில் ஜன.25ஆம் தேதி இரண்டாவது நாளான இன்று சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து, அதற்கான முன் ஏற்பாடுகளை செய்தனர்.

கிரேன் கொண்டு வரப்பட்டு, அதில் பெரிய கூண்டு கட்டி, அதில் வனத்துறையினர் மற்றும் வன மருத்துவர்கள் அதில் ஏறி சோளக்காட்டை நெருங்கி ஆய்வு செய்தனர். சோளக்காட்டைச் சுற்றி வனத்துறையினர் ஒலி எழுப்பினர்.

அந்த சத்தத்திற்கும் சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அதேபோல் வனத்துறையினரின் வாகனத்தை வைத்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. அந்த சத்தத்திற்கும் எந்தவிதமான அறிகுறியும் தென்படவில்லை.

இதனால் குழப்பமடைந்த வனத்துறையினர் சிறுத்தை உறுதியாக சோளக்காட்டில் தான் இருக்கிறதா என்ற சந்தேகத்திற்கு வந்து, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியை கைவிட்டு விட்டு நேரடியாக சோளக்காட்டிற்கு உள்ளே சென்று சோதனை செய்தனர்.

மாயமான சிறுத்தை

அதில் சிறுத்தை சோளக்காட்டில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் மாவட்ட துணை வனப்பாதுகாவலர் கிருஷ்ணசாமி தொடர்ந்து கண்காணிப்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் காலை முதல் சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து வேறு பகுதிக்கு நகர்ந்து சென்றுள்ளதாகக் கூறினார்.

அவர் மேலும், பாப்பாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வனப் பாதுகாப்புத் துறையினர் 80 பேர் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றோம் என்றும் கூறினார்.

இந்நிலையில் பாப்பாங்குளம் சோளக்காட்டைச் சுற்றி, பொருத்தி இருக்கக்கூடிய 12 கேமராக்களை தவிர்த்து மேலும் 20 கேமராக்கள் வரவழைக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்படும் என்றும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதையும் படிங்க:கௌதம் கம்பீருக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details