தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் வனத்துறை தேடுதல் வேட்டை - யானை

தமிழ்நாடு கேரள மாநில எல்லையில் உடல்நிலைப்பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டுயானையை ட்ரோன் மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கும்கிகளை வரவழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் வனத்துறை தேடுதல் வேட்டை
காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் வனத்துறை தேடுதல் வேட்டை

By

Published : Aug 16, 2022, 10:45 PM IST

கோவை:ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு - கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது. 70 விழுக்காடு வனப்பகுதி கொண்ட இங்கு காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழ்நாடு கேரள மாநிலங்களைப்பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருந்தது.

வாயில் காயம் ஏற்பட்ட நிலையில் உணவு எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் யானை இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை முதல் யானை ஆற்றில் நின்று கொண்டு இருந்ததால், இதற்கு யார் சிகிச்சை அளிப்பது என இருமாநில வனத்துறையினர் இடையே குழப்பம் நீடித்து வந்தது.

அதே சமயம் கேரள வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும், தமிழ்நாடு வனப் பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் இங்குள்ள வனத்துறையினரும் நின்றனர். இதன் காரணமாக அந்த காட்டு யானை எந்தப் பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்தது.

இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், ”ஆற்றின் நடுவே நின்று கொண்டிருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு உடனடியாக தமிழ்நாடு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்;கேரள வனத் துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.

யானையை காப்பாற்ற தமிழ்நாடு வனத்துறையினர் முன்வர வேண்டும்; யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் இழுத்தடிப்பு செய்து வருவது முறையல்ல; காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தனர்.

வழக்கமாக காவல்துறையில் எல்லைப் பிரச்சனை காரணமாக வழக்குகளை யார் விசாரிப்பது என்பதில் குழப்பம் இருந்து வரும் நிலையில், வனத்துறையிலும் எல்லைப் பிரச்சனையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு-கேரளா வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு வனத்துறையினர் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கொடுங்கரை ஆற்றுப்பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்த போது, அப்பகுதியில் இருந்த காட்டு யானை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அந்த யானையைத் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டு யானையின் இருப்பிடத்தைக் கண்டறிய ட்ரோன் மூலம் யானையைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிக்கமுதியில் இருந்து இரண்டு கும்கி யானைகள் ஆனைகட்டி கொண்டு வரப்படுகின்றன.

யானையின் இருப்பிடம் தமிழ்நாடு பகுதிக்குள் இருந்தால் கோவை வனத்துறையினரும், கேரளாவிற்குள் இருந்தால் அம்மாநில வனத்துறையினரும் சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர்.

காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் வனத்துறை தேடுதல் வேட்டை

இதையும் படிங்க: நாளை திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா தொடக்கம்.. யானை மீது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட கொடிப்பட்டம்

ABOUT THE AUTHOR

...view details