கோவை: ஆனைக்கட்டி அடுத்த தமிழ்நாடு கேரள எல்லையான கோபனாரி பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை முதல் வாயில் காயத்துடன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றுப்படுகையில் ஆண் காட்டு யானை ஒன்று நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் திடீரென அந்த யானை மாயமானது.
இதனையடுத்து மாயமான காட்டு யானையை தமிழ்நாடு கேரளா வனத்துறையினர் தேடி வந்த நிலையில், தமிழ்நாட்டு வனப்பகுதியான செங்குட்டை என்ற இடத்தில் நேற்று முன்தினம் (ஆக.17) அந்த யானை இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் மீண்டும் மாயமானது. தொடர்ந்து செங்குட்டை, ஊக்கயனூர் பகுதியில் வனத்துறையினர் தேடி வந்தனர்.